​அறிக்கை: முஸ்லிம் விவாக விவாகரத்துச் சட்ட (MMDA ) சீர்திருத்தங்களில் என்ன நடக்கிறது? தாமதம் போதும், இப்போதே செயல்படுங்கள்!

1951 ஆம் ஆண்டின் முஸ்லிம் விவாக விவாகரத்துச் சட்டத்தில் (MMDA) திருத்தங்களுக்கான பரிந்துரைகளை வழங்குவதற்காக நியமிக்கப்பட்ட குழுவை 2025 ஆம் ஆண்டின் பிற்பகுதியில், நீதி அமைச்சு மீண்டும் கூட்டியது. அரசாங்கம் பிப்ரவரி முதல் ஏப்ரல் 2024 வரை ஒரு பொது மக்கள் கலந்தாய்வு செயல்முறையையும் தொடங்கியது. இதன் போது MMDA சீர்திருத்தத்தின் பின்வரும் முக்கியமான ஐந்து பகுதிகள் குறித்து பரிந்துரைகளைச்   செய்வதற்காக பங்குதாரர்களை அழைத்தது: 

(1) திருமணத்திற்கான குறைந்தபட்ச வயது; 

(2) திருமண ஆவணங்களில் மணப்பெண்  கையொப்பமிடுவதற்கான உரிமை; 

(3) பலதார மணம் மற்றும் அதனைச் சூழவுள்ள நிபந்தனைகள்; 

(4) காதி / மாவட்ட குடும்ப நீதிமன்ற முறைமை;

(5) காதி நீதிபதிகளாக சேவையாற்றுவதற்கான பெண்களின் தகுதி /  இதற்குப் பதிலளிக்கும் விதமாக, எங்களது அமைப்பு உட்பட பல அமைப்புகளும் தனிநபர்களும் நீதி அமைச்சிடம் விரிவான சமர்ப்பிப்புகளைச் செய்துள்ளனர்.

MMDA மற்றும் காதி நீதிமன்ற முறைமையின் கீழ் முஸ்லிம் பெண்களும் சிறுமிகளும் எதிர்கொள்ளும் பாரபட்சமான நிலையை  முடிவுக்குக் கொண்டுவர தற்போதைய அரசாங்கம் ஈடுபாட்டுடன் உள்ளது  என்ற நம்பிக்கையின் அடிப்படையில் , நல்ல நோக்கத்துடன் நாங்கள் எங்களது சமர்ப்பிப்புகளைச் செய்தோம்.

​பொது கலந்தாய்வு செயல்முறை ஒரு அர்த்தமுள்ள முற்போக்கான நடவடிக்கையாகும். இருப்பினும், கலந்தாய்வுகள் முடிவடைந்து நான்கு மாதங்கள் கடந்த நிலையிலும், இதுவரை MMDA சீர்திருத்தத்தின் முன்னேற்றம் குறித்து எந்தச் செய்தியும் வெளிவரவில்லை.

​எனவே, நாங்கள்  நேரடியாகவே கேட்கிறோம். 

MMDA சீர்திருத்த செயல்முறையின் நிலை என்ன? பெறப்பட்ட பொது மக்கள் கருத்துக்களுக்கு நீதி அமைச்சு என்ன செய்துள்ளது? MMDA திருத்த மசோதா நிறைவேற்றப்படுகின்றதா? அப்படியாயின், எந்தக் காலக்கெடுவுக்குள்? அனைத்து விடயங்களையும் உள்ளடக்கிய சட்டச் சீர்திருத்தச் செயல்பாடு நடைபெற வேண்டும் என்பது நோக்கமாக இருந்தால், பொதுமக்களுக்கு எப்போது அறிவிக்கப்படும்?

​சட்டச் சீர்திருத்தங்களில் குறிப்பாக MMDA சீர்திருத்தங்களில் மௌனமும் தாமதமும்,  புதிதல்ல. இலங்கை முஸ்லிம் பெண்கள் MMDA சீர்திருத்தத்திற்காக பல தசாப்தங்களாக காத்திருக்கின்றனர். 2021 இல் அப்போதைய நீதி அமைச்சரால் நியமிக்கப்பட்ட குழு தனது பரிந்துரை செய்யும் பணியை முடித்திருந்தது. இருப்பினும், நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட இந்தச் சீர்திருத்தத்தை அமுல்படுத்துவதில் விவரிக்க முடியாத தாமதங்கள் ஏற்பட்டது.

​சமூக நீதி மற்றும் மக்களின் நலன் என்ற ஆணையுடன் தேர்ந்தெடுக்கப்பட்ட தற்போதைய அரசாங்கம், அந்த ஆணையை கோரும் வேகத்துடன் செயல்படும் என்று நாங்கள் நம்பியிருந்தோம். ஆனால்,  மீண்டும் ஒருமுறை அமைதியாகிப் போன ஒரு செயல்முறைக்காக நாங்கள் காத்திருக்கிறோம். ஒவ்வொரு தாமதமும் கடுமையான விளைவுகளை ஏற்படுத்துகிறது: முஸ்லிம் சிறுமிகள் தங்கள் கல்வியை முடிப்பதற்குப் பதிலாக குழந்தை திருமணத்தின் ஆபத்தை எதிர்கொள்கின்றனர்; முஸ்லிம் மணப்பெண்கள் தங்கள் திருமணங்களில் முறைப்படி கையொப்பமிடவும் சம்மதிக்கவும் முடியாத நிலையில் உள்ளனர்; மேலும் முஸ்லிம் பெண்களும் அவர்களது குடும்பத்தினரும் நியாயமற்ற விவாகரத்து நடைமுறைகளை எதிர்கொள்கின்றனர் மற்றும் தற்போதைய காதி நீதிமன்ற அமைப்பிற்குள் பல்வேறு சிரமங்களைச் சகிக்க வேண்டியுள்ளது. 

​சுருக்கமாகக் கூறின், MMDA (முஸ்லிம் விவாக மற்றும் விவாகரத்துச் சட்டம்) முழுமையாகச் சீரமைக்கப்படும் வரை, முஸ்லிம் பெண்களும் சிறுமிகளும் சம உரிமையற்ற குடிமக்களாகவே வாழ வேண்டிய நிலை ஏற்படும்.

​இச்சீர்திருத்தங்கள் முஸ்லிம் பெண்களின் மற்றும் சிறுமிகளின் நீதி தொடர்பான பிரச்சினை மட்டுமல்ல; இவை ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகத்திற்கும் மற்றும் பரந்த இலங்கைச் சமூகத்திற்கும் நன்மையளிக்கும் சட்டத் திருத்தமாகவே அமையும் . நியாயமான, நீதியான குடும்பச் சட்டமானது ஒவ்வொரு குடும்ப உறுப்பினரின் கண்ணியத்தையும் பாதுகாக்கும். அதேவேளையில், வினைத்திறனுடன் இயங்கும் காதி/குடும்ப நீதிமன்ற முறைமையானது காலதாமதங்களைக் குறைத்து, குடும்பங்கள் மற்றும் நீதிமன்றங்களின் சுமையைக் குறைப்பதுடன், ஒட்டுமொத்த நீதி அமைப்பின் மீதான மக்களின் நம்பிக்கையையும் வலுப்படுத்தும்.

​இச்சட்டத்தை முழுமையாக ரத்து செய்யக் கோருவதையோ அல்லது சீர்திருத்தங்களைத் தாமதப்படுத்துவதையோ நியாயப்படுத்த முடியாது. நாங்கள் இவ்விரு நிலைகளையுமே நிராகரிக்கிறோம். மாறாக, நீதி, சமத்துவம் மற்றும் கருணை ஆகிய இஸ்லாமியக் கோட்பாடுகளை அடிப்படையாகக் கொண்ட MMDA இன் விரிவான சீர்திருத்தமே ஒரே வழி என்பதைத் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகிறோம். மேலும், இச்சீர்திருத்தமானது இலங்கை அரசியலமைப்பின் 12-ஆம் சரத்திற்கு முழுமையாக இணங்குவதாகவும் அமைய வேண்டும் என்பதையும் நாங்கள் இங்கே வலியுறுத்துகின்றோம். தயக்கங்களோ அரை குறை நடவடிக்கைகளோ முஸ்லிம் சமூகத்திற்கு பயனளிக்காது; முஸ்லிம் பெண்களும் சிறுமிகளும் எதிர்கொள்ளும் இன்னல்களிலிருந்து அவர்களைப் பாதுகாப்பதே ஒரே தீர்வாகும்.

​பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான வன்முறைகளை முடிவுக்குக் கொண்டுவருவதாகவும், அனைத்துக் குழந்தைகளின் உரிமைகளைப் பாதுகாப்பதாகவும் உறுதியளித்தே இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்தது. அந்த வாக்குறுதிகள் தங்களுக்கும் நிறைவேற்றப்படுமா என்ற எதிர்பார்ப்புடன் இலங்கை முஸ்லிம் பெண்களும் சிறுமிகளும் காத்திருக்கின்றனர்.

​எனவே, நீதி அமைச்சரிடமும் அவருக்கு ஆலோசனைகளை வழங்க நியமிக்கப்பட்ட குழுவிடமும் நாங்கள் அவசரமாகக் கேட்பது யாதெனில்:

​MMDA சீர்திருத்த மசோதாவின் தற்போதைய நிலையைப் பகிரங்கமாக வெளிப்படுத்துங்கள்;

​சட்ட ஆக்கச் செயல்முறை, அமைச்சரவை ஒப்புதல் மற்றும் சீர்திருத்த மசோதாவைப் பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தல் ஆகியவற்றுக்கான தெளிவான காலக்கெடுவை வழங்குங்கள்;

​MMDA மற்றும் காதி நீதிமன்ற அமைப்பின் கீழ் பெண்கள் மற்றும் சிறுமிகள் எதிர்கொள்ளும் அனைத்து விதமான பாகுபாடுகளும் களையப்படுவதை உறுதி செய்யுங்கள்.

​முஸ்லிம் பெண்களும் சிறுமிகளும் இச்செயல்பாட்டில் தீவிரமாகப் பங்கேற்றுத் தங்கள் குரல்களைப் பதிவுசெய்துள்ளனர். இனி அரசாங்கத்தின் முறை — எவ்வித தாமதமுமின்றி உடனடியாகச் செயல்படுங்கள்.

​இனி தாமதிக்க வேண்டாம். MMDAவை இப்பொழுதே சீர்திருத்துங்கள்!

​(முஸ்லிம் தனியார் சட்ட சீர்திருத்த நடவடிக்கைக் குழு (MPLRAG),  

ஆய்வுக்கும் மேம்பாட்டிற்குமான இஸ்லாமிய மகளிர் ஒன்றியம் (IWARE) மற்றும்

மனித எழுச்சி நிறுவனம் (HEO) ஆகியவற்றின் கூட்டறிக்கை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *